முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்பாருங்கள்- உங்களிடம் மட்டும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்களும் குறைவாக இருக்கும் என்ற பழமொழி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. எதிர்பார்ப்புகள் இருக்கையில் அதற்கு எதிர்மாறாக என்ன நடந்தாலும், யார் நடந்து கொண்டாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கசப்பையே எதிர்பார்ப்பின் பலனாக நாம் காண நேர்கிறது.

எத்தனையோ விதங்களில் நடந்ததும் மற்றவர் நடந்து கொண்டதும் சிறப்பாக இருந்தாலும் நம் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாக நடந்த சிறு சிறு விஷயங்கள் அந்த சிறப்பு அம்சங்களை ரசிக்க விடாமல் மனம் சிணுங்க வைக்கிறது. இப்படி செய்திருக்கக்கூடது, அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று மனம் விமரிசித்துக் கொண்டே இருக்கையில் நன்றாக நடந்த மற்ற விஷயங்களை நாம் கவனிக்கவும் மறந்து விடுகிறோம். எனவே எதிர்பார்க்காமல் இருக்கும் போது நடப்பதை ஏற்றுக் கொள்வது எளிதாகிறது. அப்படி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறும் போது எல்லா சூழ்நிலைகளிலும் மன அமைதியுடன் இருக்கவும் செயல்படவும் முடிகிறது.

மார்கஸ் அரேலியஸ் என்ற ரோமானியப் பேரரசர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அவர் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் "இன்று நான் எல்லா தரப்பட்ட மோசமான மனிதர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களது சொல்லும் செயலும் என்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப் போகிறேன்...."என்று கூறி மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு தான் வேலையைத் துவங்குவார் என்று கூறுவார்கள். இந்த எதிர் மறையான எதிர்பார்ப்பு அவரை எல்லாவற்றிற்கும் தயார் மனநிலையில் வைத்திருந்தது. இதில் முக்கியமானது அவரது இரண்டாம் வாக்கியம்.

மார்கஸ் அரேலியஸ் சொன்னது போல மற்றவர்களது சொற்களும், செயல்களும் நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். அதை சாதிக்க மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் உதவுகிறது. எனவே மற்றவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கைவிடுங்கள். அந்த எதிர்பார்ப்பை புறத்திலிருந்து உட்பக்கம் திருப்புங்கள். உங்களிடமிருந்து எதிர்பார்க்கத் துவங்குங்கள். எதிர்பார்க்கும் உரிமையும் அங்கு மட்டும் தான் உங்களுக்கு இருக்கிறது.

ஆனால் பொதுவாகவே இதற்கு நேர்மாறானததைத் தான் நாம் செய்கிறோம். நம்மிடம் அதிகம் எதிர்பார்க்காமல் மற்றவர்களிடம் தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம். நம்மை நாம் இருப்பது போலவே ஒத்துக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்கிறோம். "நான் சின்னதில் இருந்தே அப்படித்தான்.." என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். மற்றவர்களை அளக்கும் போதோ நம் அளவுகோல்கள் மாறி விடுகின்றன. கறாராக மாறி விடுகிறோம். இந்த ஏற்றுக் கொள்தலும், எதிர்பார்ப்பும் நம்மிடம் இருப்பது நல்லதே - ஏற்றுக் கொள்தல் அடுத்தவரிடத்தும், எதிர்பார்ப்பு நம்மிடத்தும் இருக்கும் வரை.

"ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகான சிலை ஒளிந்து கொண்டு இருக்கிறது. தேவையற்ற பகுதிகளைத் தட்டி எறிந்து மீதமிருப்பதை அழகாக செதுக்கினால் கல்லும் சிற்பம் ஆகும்"

நம்மில் பலரும் அப்படி கல்லாக இருக்கிறோம். என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குத் தேவையில்லாத பலதையும் நம்மிடம் இருந்து நீக்க வேண்டும். சிலவற்றை நம்மில் மெருகுபடுத்த வேண்டும். சிலவற்றைக் கூராக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய உந்துதல் வேண்டும். அப்படி ஆக நம்மிடம் நமக்கு உறுதியான எதிர்பார்ப்பு வேண்டும். நம்மை நாம் இப்படி ஆராய்ந்து எதிர்பார்த்து செயல்பட ஆரம்பிக்கும் போது, ஒரு சில மாற்றங்கள் நம்மில் ஏற்பட்டு நாம் சாதிக்க ஆரம்பிக்கும் போது தானாக உற்சாகம் நம்மில் பிரவாகம் எடுக்கும். வேகமும் ஏற்படும். நாம் விரும்பிய உருவத்தை நம் வாழ்வில் தரும் வரை நம்மால் ஓய முடியாது.

எனவே உங்களிடம் இருந்து நிறைய எதிர்பாருங்கள். ஒவ்வொரு கணத்திலும் உயர்ந்ததை மட்டுமே வெளிப்படுத்துவேன் என்று உறுதி பூணுங்கள். அந்த எதிர்பார்ப்பிற்குக் குறைவாக நீங்கள் செயல்படத் துவங்கும் போதெல்லாம் உங்களையே கடிந்து கொண்டு உயர்வுக்கு மாறுங்கள். "நான் அப்படித்தான். என்னால் இதற்கு மேல் முடியாது. ஏனென்றால் ....." என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்கு எதிரியாக நீங்களே செயல்படாதீர்கள். உங்களை நீங்களே மட்டுப்படுத்தி விடாதீர்கள்.

இன்றே உங்களிடமிருந்து அகற்ற வேண்டியதையும், மெருகூட்ட வேண்டியதையும் பட்டியல் இடுங்கள். உங்கள் ஆதர்ச உருவம் இப்படி இருக்க வேண்டும் என்று உருவகம் கொடுத்து உங்களைச் செதுக்க ஆரம்பியுங்கள். உங்களிடம் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் வரை, அதற்கு நேர்மாறான எதையும் உங்களிடத்தில் நீங்கள் சம்மதிக்காத வரை, அந்த உருவமாக நீங்கள் உருவாவதை யாருமே தடுக்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னை கவர்ந்த கவிதை,... (சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து) அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும் வார்த்தை கூட நான் கேட்டதில்லை நீ பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் . என் புத்தகச் சுமை முதுகை அழுத்தி அழுதபோது செருப்பில்லாத பாதங்களேடு இடுப்பில் என்னை இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய். அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப் படுத்தியது என் தலை கோதிய உன் விரல்களல்லவா ? எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்தது உனது இதயத் தழுவலும் பெருமைப் புன்னகையுமல்லவா ? வேலை தேடும் வேட்டையில் நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது ஆறுதல் கரமானது உனது ஆறுவரிக் கடிதமல்லவா ? எனக்கு வேலை கிடைத்தபோது நான் வெறுமனே மகிழ்ந்தேன் நீதானே அம்மா புதிதாய்ப் பிறந்தாய் ? உனக்கு முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த ஒரு புடவையை விழிகளின் ஈரம் மறைக்க கண்களில் ஒற்றிக்...

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

The Children of Heaven

'Children of Heaven' இத் தி ரை க்கவியத்தை செப்டம்பர் 28 ஆம் நாள் பார்த்தேன் என்னை மிகவும் சந்தோச படுத்திய நாளும் இதுவே அழவைத்த நாளும் இதுவே எனது சிறுவயதின் சில நிகழ்வுகளை என்னக்கு காண்பித்த நல்ல திரைகவியம் முடிந்தால் நீங்களும் பாருங்கள்! இத் திரைப்படம் பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.